தமிழீழம்,

தமிழீழம்,

Friday, September 3, 2010

பரந்தனுக்கு வந்து பாருங்கள்

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை? -

'பரந்தனுக்கு வந்து பாருங்கள்' என்று அழைத்தார் ஒரு நண்பர். அவர் ஒரு விவசாயி. பரந்தனில் உழைத்து பரந்தனிலேயே வாழ்ந்தவர். பரந்தனையும் தன் பங்குக்குக் கட்டியெழுப்பியவர்.

'பரந்தனில் அப்பிடி என்னதானிருக்கு?' என்று கேட்டேன்.

'அங்கேயிருந்த ரசாயனப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை இல்லை. நகரின் மத்தியிலிருந்த கடைத் தொகுதி இல்லை. சந்தை இல்லை. தண்ணீர்த்தாங்கி இல்லை. ஆயிரக்கணக்கில் நின்ற மாடுகள் இல்லை. குமரபுரத்துக்குத் திரும்புகிற சந்தியிலிருக்கும் வைரவர் கோவில் இல்லை. ரெயில்வே ஸ்ரேசன் இல்லை. சனங்கள் ஒருவருக்கும் வீடுகளில்லை. பலருக்குக் கைகால்களில்லை. சிலருக்குக் கண்கள் இல்லை. நல்ல தெருக்கள் இல்லை. மின்சாரமில்லை. யாரிடமும் ஒரு வண்டியோ வாகனமோ கிடையாது....'

இப்பிடியே அடுக்கிக் கொண்டு போனார் நண்பர்.

'அப்பிடியென்றால் இப்ப அங்க என்னதானிருக்கு?' என்றேன்.

'பரந்தனில் உடைந்து நொருங்கியிருக்கும் தண்ணீர்த்தாங்கியிருக்கு. செத்துப் போன நூற்றுக்கணக்கான மாடுகளின் எலும்பு எச்சங்கள் இருக்கு. கைகால்களை இழந்து போனவர்கள் இருக்கினம். கடனாளியள் பைத்தியமாகியவர்கள்இ அநாதைகள் எல்லாரும் இருக்கினம். அதிலும் இரண்டு கால்களையும் இழந்தவர்கள்இ இரண்டு கைகளையும் இழந்தவர்கள் எல்லாம் இருக்கினம். தாயையும் தகப்பனையும் இழந்து ஆரோட வாழுறதெண்டு தெரியாத பிள்ளையள் இருக்கு. தரப்பாள் கூடாரங்கள் இருக்கு. சந்தியில புத்தர் கோயில் இருக்கு. ஆமிக்காம்புகள் இருக்கு. சந்தியில ஆமிக்காரர் நடத்திற ஐஞ்சாறு கடையள் இருக்கு. வெளிச்சமில்லாத இரவுகள் இருக்கு. (இருட்டிருக்கு). விதைக்கப்படாத வயல்கள் இருக்கு. எல்லாரிட்டையும் தாரளமாகக் கண்ணீர்க் கதைகள் இருக்கு. சாப்பாடில்லாத நாட்கள் இருக்கு. ஆமிக்காரரின்ர புலன் விசாரணைகள்இ கண்காணிப்புகள் எல்லாம் இருக்கு. பூசையே இல்லாத கோயில்களிருக்கு. அழகான விளம்பரத் தட்டிகள் இருக்கு. இயக்கத்தின்ர அடையாளங்களாக சிதைந்து போன எச்சங்கள் இருக்கு. முல்லைத்தீவுக்குத் திரும்புகிற சந்தியில லெப் கேணல் குட்டிசிறியின்ர நினைவாகச் செய்யப்பட்ட சிலையின்ர இடிக்கப்பட்ட சிதைவுகளிருக்கு...'

நண்பர் முடிக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால்இ எனக்கு மூச்சுத்திணறியது. இந்தமாதிரி இப்ப அநேகமான வன்னிக் கிராமங்கள் இருக்கெண்டு எனக்குத் தெரியும். ஆனால்இ அதையெல்லாம் இப்பிடித் தொகுத்து நண்பர் சொல்லேக்க அதைத் தாங்கேலாமல் கிடக்கு.

இந்தப் பூமியில ஒண்டும் புதுசா இல்லை. எல்லாமே ஏற்கனவே அறிஞ்சதுதான். ஆனால்இ திரும்பச் சொல்லுற விதத்தாலதான் அவையெல்லாம் புதுசாஇ அர்த்தம் தாறமாதிரி இருக்கு.

இந்தப் பூமியில அநீதிஇ அக்கிரமம்இ கொடுமைஇ அழிவுகள்இ போர்இ அதின்ர இழப்புகள் எல்லாமே புதிசில்ல. அது எல்லாக் காலத்திலயும் எங்கோ ஒரு இடத்தில நடந்து கொண்டுதானிருக்கு.

'மனிசர் நாகரீகம் அடைஞ்சிருக்கினம். உலகம் முன்னேறியிருக்கு' எண்டெல்லாம் சொல்லப்படுது. இந்தப் பூமியில அமைதியைப் பற்றிஇ சமாதானத்தைப் பற்றிக் கதைக்கிற கதைகள் கொஞ்சமில்லை. ஆனால்இ கொடுமைகளும் ஆரும் விரும்பாத போரும் நடந்து கொண்டுதானிருக்கு.

இப்ப எங்களின்ர மண்ணில நடந்த போரால சனங்கள் பட்டிருக்கிற பாடுகள்இ அதுகள் சந்திச்சுக் கொண்டிருக்கிற துன்பங்கள் எல்லாம் கொஞ்சமில்ல.

பரந்தனில முந்தி நெல்மணந்தானிருக்கும். அதோட கலந்து சோடாப்பக்ரறி எண்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின்ர குளோரின் மணமும் இருக்கும். பச்சைப் பசேல் என்ற நெல்வயல் ஏக்கர்கணக்கில கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியும். மாடுகளின்ர கூட்டம். நெல்லவிக்கும் மணம். நெல்லுக் குத்தும் மில்கள். சந்தையில இருக்கிற பரபரப்புஇ இரவோ பகலோ என்று தெரியாத வெளிச்சம்இ குமரபுரம் முருகன் கோவில்இ பரந்தன் வைரவர்இ சோடாப்பக்ரறிப் பிள்ளையார் கோவில்கள் எல்லாத்திலையும் கேட்கிற மணியோசை இருக்கும். சோடாப்பக்ரறிக்கு வேலைக்கு வாற ஆட்கள்இ வேலை முடிஞ்சு போற ஆட்கள்இ அரசியல் கூட்டங்கள்இ கட்சிக் கொடிகள்இ பிறகுஇ இயக்கங்களின்ர காலத்தில போராளிகளின்ர நடமாட்டம் எல்லாம் இருந்தது.

இப்பஇ அது சுடுகாடு. கற்குவியலாகிஇ கண்ணீர் மேடாகிஇ காய்ந்த நிலமாகிஇ சப்பாத்துகளின் விளைநிலமாகியிருக்கும் இடிபாடுகளின் காடு.

இந்தச் சுடுகாட்டில இருக்கிற நூற்றுக்கணக்கான துயரப்படுகிற மனிசரில இப்ப ஒருத்தியின்ர கதை இது. இதை என்னைப் போல அங்கே இப்ப புதிசா ஒரு விருந்தாளியாக வந்திருக்கிற புத்தர் பெருமானும் அறிஞ்சிருப்பார் எண்டு நினைக்கிறன்.

இந்தப் பெண்ணுக்கு – பிள்ளைக்கு – வயசு 20. வயதுக்கேற்ற தோற்றம் இல்லை. கண்களில் மகிழ்ச்சியில்லை. வாடி ஒடுங்கிய தேகம். பெயர்இ சுப்பிரமணியம் நித்தியகலா. இப்ப பரந்தன் - முல்லைத்தீவு றோட்டிலஇ நாலாம்குறுக்குத் தெருவில இருக்கிற 99 ஆம் இலக்க வீட்டில (அது தரப்பாள் கூடாரம்) ஒரு குடும்பத்தோட இருக்கிறாள்.

நித்தியகலாவின் வீடு முன்பு கிளிநொச்சி அம்பாள் குளத்தில் இருந்தது. இப்ப அவள் அங்கே போகமுடியாது. அவளுக்கு யாருமே இல்லை. இந்த நிலையில் அவள் எப்பிடி அங்க போயிருக்க முடியும்?

இனம் இனத்தோடதான் சேரும் என்பார்கள். இவளும் இவளைப் போல பாதிக்கப்பட்டிருக்கிற ஒரு குடும்பத்தோடதான் இருக்கிறாள். அது அழகேஸ்வரியின்ர வீடு. அழகேஸ்வரியின்ர கணவர் செல்லடியில செத்துப்போனார். அழகேஸ்வரிக்கு இரண்டு பொம்பிளைப் பிள்ளையள். இப்ப மூண்டாவது பிள்ளையாக நித்தியகலாவைத் தன்னோட வைச்சுப் பார்க்கிறார் அழகேஸ்வரி.

அழகேஸ்வரி நித்தியகலாவை வவுனியா அகதி முகாமில சந்திச்சிருக்கிறார். நித்தியகலாவுக்கு ஒரு சொந்தக்காரரும் இல்லை. எல்லாரும் 17.05.2009 ஆம் திகதிஇ யுத்தம் முடிவுக்கு வந்த நாள் வட்டுவாகலில் செத்துப் போனார்கள்.

நாலு அண்ணன்மாருக்கு கடைசிப் பெண்ணாகஇ செல்லக்குட்டியாக இருந்த நித்தியகலா இப்ப அநாதை. கைஇ கால்இ முதுகெல்லாம் காயப்பட்ட தழும்புகள். மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கிறாள்.

நித்தியகலாவின் சொந்தக்காரர்கள் 27 பேர் அன்று செத்திருக்கிறார்கள். யுத்தம் முடியும் தறுவாய். எப்படியோ அந்த இறுதிக் கணங்களைக் கடந்து விட்டால் போதும். பிறகு சமாளித்துக் கொள்ளலாம் எண்டுதான் எல்லாரும் இருந்தார்கள்.

ஆனால்இ அப்பஇ அந்தக் கடைசிநாளின் கடைசிக் கணங்களில் வந்து விழுந்த செல் ஒரேயடியாய் அத்தனை பேரையும் ஒண்டாத் திண்டிருக்கு. அவள் தன்னுடைய செத்துப் போன சொந்தக்காரரின்ர பேரைச் சொல்கிறாள்.

'எனக்கு நாலு அண்ணமார். நித்தியானந்தன். நித்தியரூபன். நிஸாந்தன். நிரூபன் எண்டு. ஒருத்தர் போராளியாக இருந்து வீரச்சாவடைந்திட்டார். மற்ற அண்ணன்மார் எங்களோடதான் இருந்தவை. நாங்கள் எல்லாரும் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து வட்டுவாகல்வரையும் போட்டம். அதுவரையும் சின்னச்சின்னக் காயங்கள்தான் பட்டம். ஆனால்இ ஆருக்கும் உயிருக்கு ஒண்டுமில்லாமல் இருந்துது.

நாங்கள் எல்லாரும் ஒண்டாகத்தான் இருந்தம். அம்மம்மாஇ அப்பப்பாஇ சித்தப்பா குடும்பம்இ அத்தையாக்கள்இ மாமா குடும்பம் எண்டு எல்லாரும். வட்டுவாகலில கடைசியா இருக்கிறம். ஆமி எல்லாரையும் சுத்தி வளைச்சுப் போட்டுது எண்டு சொல்லிச்சினம்.

எல்லாப்பக்கமும் வெடிச்சத்தம். தலையெடுக்கேலாது. எனக்கு திசை ஒண்டுந் தெரியேல்ல. பழக்கமில்லாத இடம். சனங்கள் செத்துக் கொண்டிருந்துதுகள். எல்லாப் பக்கத்தாலயும் அழுகுரல்கள் கேட்டுக் கொண்டிருந்துது.

நாங்கள் அழுதம். இயக்கமும் ஆமியளும் மாறிமாறிச் சுட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன செய்யிறது? கொஞ்சநேரம் பாப்பம் எண்டு சின்னண்ணா சொன்னான். அப்பிடியே இருக்கிறம். நிலைமை மாறேல்ல. சனங்கள் செத்துக் கொண்டிருந்துது. அதைப் பாக்கப் பயமா இருந்துது. எனக்கு தலை சுத்திக் கொண்டு வந்திது.

அத்தை சரியாப் பயந்தவா. அவ மயங்கியே விழுந்திட்டா. ஒழங்கான பங்கரும் இல்ல. என்ன செய்யிறது? நடக்கிறதக் காணவேண்டியதுதான்...

அப்பதான் அந்தச் ஷெல் விழுந்தது.....

..........'

அழுகை நிற்கவில்லை.

நித்தியகலா விம்மி விம்மி அழுகிறாள். 27 பேரைஇ அவளுடைய குடும்பத்தில இருந்த நெருங்கிய சொந்தக்காரர்கள் அத்தனை பேரையும் விழுங்கியிருக்கு அந்தச் ஷெல். அவளை அநாதையாக்கியிருக்கு அந்தச் ஷெல்.

இப்ப அவள் தனிமரம். அழகேஸ்வரி எண்ட துக்கமறிந்த இன்னொரு உறவைத்தவிர அவளுக்கு வேற ஆருமேயில்லை.

பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டாள் நித்தியகலா. இப்ப துக்கத்தைத் தின்றே காலத்தைக் கழிக்கிறாள். அவளுக்கு எப்பவும் அம்மம்மாவில நல்ல விருப்பம். அம்மம்மாவுக்கும் அவளில உயிர். ஆனால்இ விதி அவளுக்கு முன்னேயே அம்மம்மாவைக் கொன்றிருக்கு.

அவள் அழுகை ஓயச்சொன்னாள்.

'அம்மம்மா எனக்கு முன்னால செத்ததை என்னால மறக்கேலாமக்கிடக்கு...' அழுகிறாள். '........ அதப் போல அத்தையின்ர பிள்ளையள்... மாமாவின்ர பிள்ளையள்.... எல்லாம் சின்னப் பிள்ளையள்....'

அவளிடம் விவரம் கேட்டேன்.

சொன்னாள்.

அப்பா வீரய்யா சுப்பிரமணியம்இ அம்மா சுப்பிரமணியம் இராஜேஸ்வரிஇ அப்பப்பா அழகன் வீரய்யாஇ அப்பம்மா வீரய்யா பார்வதிஇ சித்தப்பா வீரய்யா ரெங்கசாமிஇ அம்மம்மா லட்சுமிஇ அத்தை மங்கையற்கரசிஇ மாமா அழகுதேவன்இ மாமாவின் பிள்ளைகள் சுதாகரன்இ விஜயாஇ பெரியய்யா இராமசாமிஇ பெரியம்மா பாலசரஸ்வதிஇ அவர்களின் பிள்ளைகள் மோகனரூபிஇ மோகன தர்சினிஇ அத்தை நகுலாஇ மற்ற மாமா தவரூபன்இ அவர்களின் பிள்ளைகள் தசீபன்இ தரூபாஇ இன்னொரு அத்தை மங்களேஸ்வரிஇ பிள்ளைகள் ரஜீவன்இ ரஜீஇ சுஜீபாஇ சஜீபன்இ சஜீபாஇ பெரியம்மாவின் மகன் சஜீவன்....

இப்பிடியொரு நீண்ட பட்டியல்.

அங்கே இறந்த எல்லாற்ற பெயரையும் அவளால் சொல்ல முடியவில்லை. துக்கம் அவளுடைய குரலைத் தடுத்து விட்டது. அதற்கு மேல் அவளால் எதுவும் சொல்ல முடியாது.

நித்தியகலாவுக்கு ஒரு சைக்கிள்கூட இல்லை. ஆஸ்பத்திரிஇ கடைஇ சந்தைஇ கோவில் என்று எல்லா இடத்துக்கும் நடந்தே போறாள். அவளால் நீண்ட தூரத்துக்கு நடக்க முடியாது. காலில் இன்னும் எடுத்து அகற்ற வேண்டிய ஷெல்லின் ஈயச் சிதறல்கள் இருக்கு.

அழகேஸ்வரி நித்தியகலாவை பிள்ளையாகவே பார்க்கிறார். நித்தியகலா அழகேஸ்வரியின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கிறாள். தண்ணீரை எடுப்பதற்காக நாலு காணி தள்ளிப் போய் எடுத்து வருகிறாள். வீட்டில் வேலை செய்கிறாள்.

அவளைப் போல அம்மா அப்பா சகோதரர்களை இழந்து அயலில் அம்மம்மாவுடன் இருக்கும் இன்னொரு 16 வயதுப் பிள்ளையுடன் தோழியாகியிருக்கிறாள். அவளுடன் கூடுதலான நேரத்தைப் போக்குகிறாள். இருவரும் அந்தக் காய்ந்த வயல் வெளிகளில் பின்னேரங்களில் நடந்து திரிகிறார்கள். தங்களுக்குள் இருக்கும் கொதிக்கும் நினைவுகளை அவர்கள் பரிமாறிக் கொள்ளக்கூடும்.

இந்த இரண்டு பிள்ளைகளைப் போல பரந்தனில் இன்னும் பலர் இருக்கினம். அதிலும் கைகள் இல்லாமல்இ கால்கள் இல்லாமல் இருக்கிறவையின்ரை கதைகள் ஆகக் கொடுமை.

என்ன செய்வது? பூமியில் எத்தனை தலைமுறைகளாக யுத்தம் நடந்து கொண்டிருக்கு? அநீதிக்கும் நீதிக்குமிடையிலான போர் என்ற ஒரு விதியில் எத்தனை துயர விளைவுகள் இப்படி?

இதைப்போல இன்னும் எத்தனை தலைமுறைகள் அழியப் போகின்றன? எவ்வளவு பேர் அநாதரவாகத் திரியப் போகிறார்கள்? எங்கே இதற்கான முடிவுப்புள்ளி?

நித்தியகலா இப்ப அந்த இருட்டுக் கிராமத்துக்குள் என்ன செய்து கொண்டிருப்பாள்? யாரையெல்லாம் எதையெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பாள்?

No comments:

Post a Comment